இக்கட்டுரையில் TNPSC Group 2 Exam-ல் இந்திய அரசியலமைப்பு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில் சுருக்கமாகவும், முக்கிய ஷரத்துக்கள் விடுபடாமலும் எழுதப்பட்டுள்ளது.
மாநில ஆளுநர் – தகுதிகள்
ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.
பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி ஏதேனும் ஓர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்து, அவரது சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம் காலியாகிவிட்டதாக கருதப்படும். ஊதியம் பெறும் வேறு எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.
ஆளுநர் – சிறப்புரிமைகள்
அரசியலமைப்பு மாநில ஆளுநருக்கென்று சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு மாநில ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள் குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.
மேலும் அவரது பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் (Criminal proceedings) நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது.
அது போலவே அவரது பதவிக்காலத்தில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளார்.
உரிமையியல் (Civil proceedings) நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2 மாதங்களுக்கு முன்பாக ஆளுருக்கு அறிவித்தல் வேண்டும்.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள்
மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு அவரே நேரிடையாகவோ, தமக்குக் கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும். மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.
மாநிலத்தின் அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.
ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் (Tribal welfare) நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவது ஆளுநரின் கடமையாகும்.
மாநிலத்தின் முதலமைச்சரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார். அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை, பதவியில் நீடிப்பார்கள்.
ஆனால் அமைச்சரவை, மாநில சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக (Collective Responsibility) உள்ளது.
அதாவது சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப் பொருள்படும்.
மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்சர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.
மாநில அட்வகேட் ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சார்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.
நியமன அதிகாரம்
மாநிலத்தில் சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு (1/6) பங்கினரை, இலக்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.
ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கு சட்டப் பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும், அதற்குப் பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.
ஷரத்து 356-ன்படி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்யலாம்.
குடியரசுத் தலைவர் ஆட்சி நேரிடுகையில் குடியரசுத் தலைவரின் முகவராக இருந்து கொண்டு, விரிவான நிர்வாக அதிகாரங்களை ஆளுநர் செலுத்துகிறார்.
மாநில தேர்தல் ஆணையரை மாநில ஆளுநரே நியமிக்கிறார். மாநில தேர்தல் ஆணையரை உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முறையிலேயே பதவி நீக்கம் செய்ய இயலும்.
ஆளுநருக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் தம் பதவியை இராஜினாமா செய்ய விரும்பினால், இராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் மற்றும் துணைப்பேரவை தலைவர் பதவிகள் காலியாக உள்ளபோக சட்டசபையில் உள்ள எந்த உறுப்பினரையும் சபைக்குத் தலைமை வகிக்க ஆளுநர் நியமிக்கலாம்.
ஆளுநரின் சட்டத்துறை அதிகாரங்கள்
மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டமன்றத்தின் எந்த அவையிலும் ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது.
சட்டமன்றத்தின் இரு அவைகளையும் (பேரவை, மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும், கூட்டத் தொடரை முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.
அவர் நினைத்தால் பேரவையைக் (Legislative Assembly) கலைத்து விட முடியும். மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுவதுடன், சட்டமன்றத்திற்குச் செய்திகளை அனுப்பவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
இரு சட்டமன்ற கூட்டத்தொடர்களுக்கிடையிலான இடைவெளி அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொதுத் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டமன்றக் கூட்டத்திலும் ஆளுநரே உரையாற்றுவார்.
தேவைப்படும்போது இருஅவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார். சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என ஷரத்து 200 கூறுகிறது.
அவையில்/அவைகளில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அம்மசோதாவுக்கு ஆளுநர் 1) தமது ஒப்புதலை அளிக்கலாம் 2) ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம் 3) குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம் 4) பண மசோதாவைத் தவிர வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தமது கருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பியனுப்பலாம். 5) மசோதாவைப் பற்றிச் சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.
ஆளுநர் தமது கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பினால், அவருடைய கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டோ, அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப் படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
ஆளுநரின் அவசர சட்டமியற்றும் அதிகாரம்
சட்டப் பேரவையின் கூட்டத்தொடர், அல்லது மேலவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில், ஷரத்து 213-ன்படி, ஆளுநர் அவசரச் சட்டங்களைப் (Ordinances) பிறப்பிக்கலாம்.
சட்டமன்றம் இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுடையவை. எனினும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களுக்கும் உள்ளன.
எனவே அ) ஒரு மசோதாவை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பினும் ஆ) ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் அனுப்ப வேண்டியிருப்பினும் 3) குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் – இம்மூன்று இனங்களிலும், குடியரசுத் தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது.
ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப் பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும்.
சட்டப்பேரவை மீண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும். அதற்கு முன்னரே அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றினால் அப்போதே அவசரச் சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்
ஆளுநரின் நிதி அதிகாரங்கள்
எந்த ஒரு பண மசோதாவும். நிதி மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இயலாது.
பட்ஜெட் அல்லது ஆண்டு நிதிநிலை அறிக்கையை மாநில சட்டமன்ற அவை அல்லது அவைகளின் முன் ஆளுநர் தாக்கல் செய்விக்க வேண்டும். இது அவரது தலையாய கடமையாகும்.
மானியக் கோரிக்கைகளையும் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் தாக்கல் செய்ய இயலாது. மானியக் கோரிக்கைள் சம்பந்தமான திருத்தங்களுக்குக் கூட ஆளுநரின் பரிந்துரை அவசியமாகிறது.
ஆண்டு நிதிநிலை அறிக்கை எனப்படும் மாநில வரவு செலவுத் திட்டம் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.
எதிர்பாராத செலவினங்களைச் சந்திப்பதற்கு, மாநில தொகுப்பு நிதியில் இருந்து முன்பணத்தை ஆளுநர் எடுக்க இயலும்.
பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையத்தை ஆளுநர் நியமிக்கிறார்.
ஆளுநரின் நீதித் துறை அதிகாரங்கள்
ஆளுநர் மாநிலச் சட்டம் தொடர்புடைய எவ்விதக் குற்றத்தின் தண்டனையில் இருந்தும் ஒருவரின் தண்டனையைக் குறைக்கவோ, தள்ளி வைக்கவோ அல்லது மன்னிப்பு வழங்கவோ முடியும்.
ஆனால் மரண தண்டனைக்கு ஆளுநரால் மன்னிப்பு வழங்க இயலாது.
தொடர்புடைய உயர்நீதிமன்றத்தின் நீதிபதி நியமனம் செய்யும்போது குடியரசுத் தலைவரால் மாநில ஆளுநர் கலந்தாலோசிக்கப்படுகிறார். நீதிபதிகளை த் தலைவரால்பர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து, மாவட் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது.
ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரங்கள்
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஏங்க மசோதாவையும் ஆளுநர் அனுப்பி வைக்கலாம். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த பரிந்துரைக்கலாம்.
மாநில அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், ஆளுநர் அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யலாம். மாநில அமைச்சரவை தன் பெரும்பான்மையை இழந்தால், ஆளுநர் சட்டசபையைக் கலைக்கலாம்.
ஆளுநரின் இதர அதிகாரங்கள்
மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டறிக்கையைப் பெறுதல் மற்றும் அதனை அமைச்சரவை, சட்டமன்றம் ஆகியவற்றின் விவாதத்திற்கு சமர்ப்பித்தல்.
மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளால், மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான இந்தியத் தலைமை தணிக்கை அலுவலரின் அறிக்கையைப் பெறுதல்.
அரசியலமைப்பின்படி ஆளுநரின் நிலை
ஆளுநரின் நிலை பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவரது அலுவலகம் மாநில அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே உள்ள அஞ்சல் நிலையம் என்று கூறுவர்.
இவர் மாநில ஆட்சித் துறையில் ஒரு சிறந்த அங்கமாக விளங்குகிறார். அமைச்சரவையின் ஆலோசனைப்படி இயங்க வேண்டும் என்றிருந்தாலும், சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்போது பயன்படுத்துவார்.
நெருக்கடிக் காலங்களின் போது குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்பு ரீதியான தலைவரான மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்ற இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ளது.
மெட்ராஸ் மாகாண சட்டமன்றம் 1919-ல் உருவாக்கப்பட்ட போது ஆளுநராக இருந்தவர் வெலிங்டன் பிரபு.
மாநில அரசு தலைமை வழக்குரைஞர்
ஷரத்து 165-ன்படி உயர் நீதிமன்ற நீதிபதியாவதற்க தகுதியுடைய ஒருவர், மாநில அரசின் தலைமை வழக்குரைஞராக (அட்வகேட் ஜெனரல்) ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அட்வகேட் ஜெனரலின் பதவிக்காலம், பதவி நீக்கம் பற்றி அரசியலமைப்பு ஏதும் குறிப்பிடவில்லை .
ஆளுநர் விரும்பும்வரை அட்வகேட் ஜெனரல் பதவி வகிக்கலாம், ஆளுநரால் எந்நேரத்திலும் பதவி நீக்கப்படலாம்.
அட்வகேட் ஜெனரல் தன் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளிப்பதன் மூலம் இராஜினாமா செய்யலாம். ஆட்சி மாறியதும் தலைமை வழக்குரைஞரும் பதவி விலகுவது மரபாக உள்ளது.
மாநில அரசு வழக்குரைஞர் மாநில எல்லைக்குள் உள்ள எந்த நீதிமன்றத்திலும் மாநில அரசின் தரப்பை எடுத்துரைக்க உரிமை பெற்றுள்ளார்.
சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு பேசும் உரிமை அட்வகேட் ஜெனரலுக்கு உண்டு. ஆனால் சபைகளில் வாக்களிக்கும் உரிமை இல்லை .
மாநில ஆளுநரால் குறிப்பிடப்படும் சட்ட விஷயங்களில் அட்வகேட் ஜெனரல் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அவருக்கு இடப்படும் சட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.