இக்கட்டுரையில், லோக்சபையின் சிறப்பு அதிகாரங்கள், இராஜ்யசபை குறித்து TNPSC தோ்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லோக்சபையின் சிறப்பு அதிகாரங்கள்
இராஜ்யசபைக்கு (Rajya Sabha) இல்லாத சில சிறப்பு அதிகாரங்கள் லோக் சபைக்கு (Lok Sabha) உள்ளன. அவை பின்வருமாறு:
(1) நம்பிக்கைத் தீர்மானம் (Confidence Motion)அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் (No Confidence Motion) இரண்டும் லோக் சபையில் மட்டுமே புகுத்தப்பட்டு, தீர்மானிக்கப்படும்.
(2) பண மசோதா (Money Bill) மற்றும் நிதி மசோதாக்கள் (Finance Bill) லோக் சபையில் மட்டுமே புகுத்தப்படும். நிராகரிக்கவோ, திருத்தவோபண மசோதாவை இராஜ்யசபைக்கு அதிகாரம் இல்லை, பண மசோதாவைப் பொறுத்த வரை இராஜ்யசபை அதிகபட்சம் 14 நாட்கள் வரை மட்டுமே தாமதப்படுத்த இயலும். பண மசோதாவைப் பொறுத்தவரை லோக்சபைக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
(3) ஷரத்து 352-ன் அடிப்படையிலான தேசிய நெருக்கடி நிலை அமுலில் உள்ள போது, லோக்சபை கூடி, நெருக்கடி நிலைப் பிரகடனத்தை நிராகரிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வர இயலும். அவ்வாறு லோக் சபை நிராகரித்தால்,நெருக்கடி நிலையை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.
இராஜ்யசபை (மாநிலங்களவை)
இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையே மாநிலங்களவை அல்லது இராஜ்யசபை என்று அழைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 80ன்படி இராஜ்யசபையில் அதிகபட்சம் 250 உறுப்பினர்கள் இடம் பெற வழி செய்யப்பட்டுள்ளது. இராஜ்ய சபையில் இரு வகையான உறுப்பினர்கள் இடம் பெறுகிறார்கள்.
அதாவது 1) உறுப்பினர்கள் மற்றும் 2) மாநிலங்கள் மற்றும் நியமன யூனியன் பிரதேசங்களிலிருந்து (சட்டமன்றம் உடைய யூனியன் பிரதேசங்கள் மட்டும்) தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆகியோர் என இரு வகைப்படுவர்.
கலை, அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களிலிருந்து 12 நபர்களை, நியமன உறுப்பினர்களாக, இராஜ்ய சபைக்கு ஜனாதிபதி நியமிக்கலாம்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான (டெல்லி + புதுச்சேரி மட்டும்) இராஜ்ய சபை உறுப்பினர் எண்ணிக்கை அதிகபட்சம் 238 எனஅரசியலமைப்பு வரையறுக்கிறது.
தற்போது, பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 233+12= 245 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இராஜ்ய சபைக்கான தற்போதைய மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245 ஆகும்.
அனைத்து மாநிலங்கள், டெல்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் ஆகியன இராஜ்ய சபையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
நமது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை (Federal Character) பிரதிபலிப்பதாக இராஜ்யசபை அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல், நமது இராஜ்ய சபையில் மாநிலங்கள் சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்று விளங்கவில்லை. மாறாக மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் இராஜ்ய சபை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அமைந்துள்ளது.
நிரந்தர சபை
இராஜ்யசபை ஒரு நிரந்தர சபையாகும். இராஜ்யசபையைக் கலைக்க இயலாது. இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் ஒய்வு பெறும் வகையில் இராஜ்ய சபை அமைந்துள்ளது.
இராஜ்ய சபையின் உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளின் (Legislative Assemblies of States) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஒற்றை மாற்று விகிதாச்சார வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இராஜ்ய சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
இராஜ்யசபையில் SC மற்றும் ST பிரிவினருக்காக தனியே இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை.
இராஜ்யசபை உறுப்பினர் தகுதிகள்
இராஜ்ய சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கீழ் வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்
(1) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் (2) 30 வயது நிரம்பப் பெற்றவராக இருத்தல் வேண்டும் (3) அவர் இராஜ்ய சபையின் எந்தத் தொகுதிக்குப் போட்டியிடுகிறாரோ, அத்தொகுதியில் வாக்களிக்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு (மூன்றில் ஒரு பங்கு இடங்கள்) தேர்தல் நடைபெறும். இத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
இராஜ்யசபை உறுப்பினருக்கான தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 10 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) முன்மொழிய வேண்டும்.
தமிழகத்தில் 39 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பின் ஒருவர் இராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முடியும்.
இராஜ்யசபை தலைவர் மற்றம் துணைத்தலைவர்
அரசியலமைப்பின் ஷரத்து 89ன்படி இந்திய துணைகுடியரசுத் தலைவரே இராஜ்ய சபையின் தலைவராகப் பணியாற்றுகிறார். துணை ஜனாதிபதியே இராஜ்யசபையின் (Ex-officio Chairman) தலைவராக விளங்குகிறார்.
இவரைத்தவிர மாநிலங்களவையின் உறுப்பினர்களில் இருந்து ஒருவர் துணைத்தலைவராக மாநிலங்களவையால் தேர்வுசெய்யப்படுகிறார். இராஜ்யசபையின் அலுவல்கள் சரியானபடி நடைபெற உதவுவதும், சபையில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வதும், வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிப்பதும் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் அதிகாரங்களாகும்.
இராஜ்யசபையின் தலைவரும். துணைத் தலைவரும், லோக்சபையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றனவோ அதே சலுகைகளையும், சிறப்புக்களையும் பெறுகின்றனர்.
துணை ஜனாதிபதி, ஜனாதிபதிக்கான பதவி முறை செயல்களைச் செய்யாத சூழலில், இராஜ்யசபையின் தலைவராகவே பணியாற்றுகிறார். துணை ஜனாதிபதி ,ஜனாதிபதியாக செயலாற்றும் போது இராஜ்ய சபையின் துணை தலைவரே, இராஜ்யசபையின் தலைவர் பணிகளை செயலாற்றுவார்.
இராஜ்ய சபையின் தலைவரே, சபையின் ஒழுங்கு மற்றும் விதிகளைக் காப்பவர் ஆவார்.
இந்தியக் குடியரசின் தலைவராக முதல் இராஜ்யசபை தலைவராக செயல்பட்டவர் டாக்டர் சர்வ பள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன் (13.05.1952 – 12.05.1957).
இந்தியக் குடியரசின் முதல் இராஜ்யசபை துணைத் தலைவராக செயல்பட்டவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்திராவ் (31.05.1952 – 01.03.1962).
இராஜ்யசபையின் சிறப்பு அதிகாரங்கள்
இராஜ்ய சபைக்கு என்று தனியே சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-
(1) துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முதலில் இராஜ்யசபையில் மட்டுமே புகுத்தப்பட்டு, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பின்னரே, லோக்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
(2) மாநிலப் பட்டியலில் (State List) உள்ளதலைப்புக்களில், பாராளுமன்றம் விரும்பினால், இராஜ்யசபையில் சட்டமியற்ற விரும்பினால் இராஜ்யசபையில் வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில், மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவளித்தால் மாநிலத் தலைப்புக்களின் மீது பாராளுமன்றம் ஒராண்டு காலம் வரை செல்லத்தக்க சட்டங்களை இயற்றலாம்.
இராஜ்யசபை இத்தகைய சட்டங்களின் கால வரைறையை, மீண்டும் ஓா் தீர்மானத்தின் மூலம் நீட்டிக்கலாம் என்றாலும், ஒவவொரு முறையும் ஒராண்டு வரை மட்டுமே நீட்டிக்க இயலும்.
(3) இராஜ்யசபையில், வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில், மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவளித்தால், பாராளுமன்றம் நாட்டின் நலன் கருதி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்திந்தியப் பணிகளுக்கான (IAS) ஆணையத்தைத் தோற்றுவிக்கலாம்.
பாராளுமன்ற நடைமுறைகள்
பாராளுமன்ற சட்டமியற்றும் முறைசட்டங்களை இயற்றுவது (Law making) பாராளுமன்றத்தின் முதன்மையான பணியாகும்.
ஜனாதிபதி, இராஜ்யசபை, லோக்சபை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகே ஒரு மசோதா சட்டமாகிறது.
சட்ட மசோதா நடைமுறைகள் மசோதா (Bill) என்பது சட்டத்தின் (Law) முந்தைய நிலை வடிவம். ஒரு மசோதா இறுதியாக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றதும் சட்டமாகிறது.
மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படும் மசோதாக்களில் பெரும்பாலானவை அமைச்சர்களாலேயே முன்மொழியப்படுகின்றன.
பெரும்பாலான மசோதாக்கள் லோக்சபையிலேயே தோற்றுவிக்கப்படுகின்றன.
மசோதாக்கள்
மசோதாக்களை பொதுவாக இரண்டு தலைப்புக்களில் வகைப்படுத்தப்படலாம்.
(1) அரசாங்க மசோதாக்கள் (Government Member Bills) (2) உறுப்பினர்களின் தனி மசோதாக்கள் (Private Member Bills) ஆகியன.
அரசாங்க மசோதா (Government Bill) என்பது மத்திய அமைச்சராக அறிமுகப்படுத்தப்படும் மசோதா ஆகும்.
உறுப்பினர்களின் தனி மசோதா அல்லது தனி நபர் மசோதா என்பது அமைச்சராக இல்லாத பாராளுமன்ற உறுப்பினரால் அறிமுகப்படுத்தப்படும் மசோதா ஆகும்.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் சட்டமியற்றுவதற்கான வழிமுறைகள் ஒரே மாதிரியாகவே இரு சபையிலும் ஒரே விதமான மசோதாக்கள் வழிமுறைகளைப் பின்பற்றியே நிறைவேற்றப்படுகின்றன.
உள்ளடக்கத்தின் அடிப்படையில் நான்கு வகை
மசோதாக்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன
(1) சாதாரண மசோதா (Ordinary Bill) (2) பண மசோதா (Money Bill) (3) நிதி மசோதா (Finance Bill) (4) அரசியலமைப்பு திருத்த மசோதா (Constitution Amendment Bill) ஆகியன.
பண மசோதா மற்றும் நிதி மசோதா (வகை-1) (Finance Bill-Type 1) ஆகிய மசோதாக்களை இராஜ்யசபையில் அறிமுகப்படுத்த இயலாது லோக்சபையில் மட்டுமே அறிமுகப்படுத்தஇயலும்.
பாராளுமன்றத்தின் பண மசோதா மற்றும் நிதி மசோதா (வகை-1) தவிர பிற மசோதாக்கள் இரு அவையில் எதில் வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்
பண மசோதா மற்றம் நிதி மசோதா (வகை-1) மற்றம் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை ஜனாதிபதியின் முன் அனுமதி பெற்ற பிறகே அறிமுகப்படுத்த இயலும்.
அதாவது இந்த மூன்று மசோதாக்களையும், தனி நபர்கள் அறிமுகம் செய்ய இயலாது. இயல்பாக ஒரு மசோதா பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் (முதல் நிலை) (First Stage) அறிமுகம் செய்யப்பட்டு, அந்த அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இரண்டாவது நிலையில் மற்றொரு அவைக்கு( Second Stage) அனுப்பப்படுகிறது.
இரண்டாவது அவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, மூன்றாவது நிலையாக (Third Stage) ஜனாதிபதியிடம் செல்கிறது. ஜனாதிபதி கையொப்பமிட்டதும் அது சட்டமாகிறது.
ஒவ்வொரு அவையிலும் மசோதா மூன்று சுற்றுக்கள் (அல்லது) வாசிப்புக்களைக் (Three Readings) கடந்து செல்வது வழக்கம். அதாவது அறிமுகசுற்று, விவாதச்சுற்று, வாக்கெடுப்பு சுற்று.(Introduction, Discussion. Voting) என மூன்று சுற்றுக்களைக் கடந்த பிறகே அடுத்த அவைக்கு செல்கிறது.
ஒரு மசோதா மூன்று நிலைகளைக் (Three Stages) கொண்டுள்ளது. எப்போதும் மூன்றாவது நிலையில் ஜனாதிபதியிடம் உள்ளது.
முதல் இரண்டு நிலைகளில் மசோதா ஏதேனும் ஒரு பாராளுமன்ற அவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பண மசோதா, நிதி மசோதா, அரசியலமைப்பு திருத்த மசோதா அல்லாத பிற மசோதாக்கள் சாதாரண மசோதாக்கள் (Ordinary Bills) எனப்படும்.
சாதாரண மசோதாக்களைப் பொருத்தவரை இராஜ்யசபையும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது எனலாம்.
லோக்சபையும், ஓரளவு சம சாதாரண மசோதாக்களை முதலில் எந்த அவையில் வேண்டுமானாலும் அறிமுகம் செய்யலாம்.
லோக் சபையில் நிறைவேறிய சாதாரண மசோதா இராஜ்யசபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பின் ஷரத்து 108-ன்படி, இராஜ்யசபை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் 6 மாதங்கள்காலம் தாழ்த்தினால், இரு அவைகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்க்கும் பொருட்டு சாதாரண மசோதாக்கள் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஆணையிடுவார்.
இரு அவைகளின் கூட்டுக்கூட்டம்
இத்தகைய கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகரே தலைமை தாங்குவார்.
இரு சபையின் உறுப்பினர்களும் இணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுகின்றனர். இந்த கூட்டத்தில் லோக்சபைஉறுப்பினர்களே அதிகம் உள்ளதால் இராஜ்யசபையின் எதிர்ப்பு எடுபடாமல் போகிறது.
எனவே இராஜ்யசபை மசோக்கள் சாதாரண விஷயத்தில் 6 மாதங்கள் மட்டுமே நிறுத்தி வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுக் கூட்டம் ஷரத்து 108, பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்தைப் (Joint Sitting) பற்றி விவரிக்கிறது.
கூட்டுக் கூட்டத்திற்கு, சபாநாயகரே தலைமை வகிப்பார். சபாநாயகர் வராத சூழலில் துணை சபாநாயகரும், அவரும் வராத சூழலில் இராஜ்யசபையின் துணைத் தலைவரும், துணைத் தலைவரும் இல்லாத சூழலில் பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு உறுப்பினரும் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிக்க அரசியலமைப்பு வழி செய்துள்ளது.
மசோதா மீது எழும் கருத்து வேறுபாடு அல்லது முரண்பாடு, கூட்டுக் கூட்டத்தின் உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்களின் மொத்த ஆதரவுடன் களையப்படும்.
லோக் சபையின்உறுப்பினர் எண்ணிக்கை அதிகம் என்பதால்,பொதுவாக கூட்டுக் கூட்டத்தில் லோக்சபை விரும்பும் முடிவு எட்டப்படும்.
கூட்டுக் கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டபின்னா் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
இதுவரை இந்தியாவில் 3 முறை மட்டுமே கூட்டுக்கூட்டம் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
1961-ல் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது முதன் முறையாக கூட்டுக் கூட்டத்தில் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பண மசோதா
பண மசோதா (Money Bill) அரசியலமைப்பின் ஷரத்து 110 வரையறை செய்கிறது.
இதன்படி கீழ்வருவனவற்றுள் ஒன்று அல்லது சிலவற்றைக் கொண்ட ஒரு மசோதாவைப் பண மசோதா என்று கருதலாம்.
அவை (1) வரி விதிப்பு, வரி நீக்கம், வரி குறைப்பு, வரி ஒழுங்குபடுத்துதல், வரி குறைப்பு அல்லது வரியை ஒழுங்குபடுத்துதல்,
(2) ஒழுங்குபடுத்துவது அல்லது இந்தியஅரசு வாங்கும் கடன்களை அதற்குரிய பாதுகாப்பை அளிப்பது அல்லது இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிதி பற்றிய அம்சங்கள்,
(3) இந்திய தொகுப்பு நிதியம் (Consolidated Fund of India) அல்லது அவசரத் தேவைக்கான தொகுப்பு நிதியம் (Contingency Fund of India) தொடர்பான அம்சங்கள் ஆகியன
ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பது பற்றிய கேள்வி எழும்போது, அது பற்றி லோக்சபை சபாநாயகரின் தீர்ப்பே உறுதியானதும் இறுதியானதுமாகும்.
சபாநாயகரின் பண மசோதா குறித்த முடிவை எந்த ஒரு நீதிமன்றமோ, ஜனாதிபதியோ கேள்விக்குள்ளாக்க இயலாது.
பண மசோதாவை இராஜ்யசபையில் அறிமுகப்படுத்த இயலாது (ஷரத்து 109). அதாவது பண மசோதா லோக் சபையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட இயலும் என்பதையே இது குறிக்கிறது.
மேலும் பண மசோதா ஜனாதிபதியின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே அறிமுகப்படுத்தப்பட இயலும்.
லோக்சபையில் பணமசோதா தேர்ச்சியடைந்தவுடன், அது இராஜ்ய சபைக்கு அனுப்பப்படும். இராஜ்ய சபை தாமாகவே திருத்தங்கள் பண மசோதாவில் மேற்கொள்ளவோ.அல்லது மசோதாவை நிராகரிக்கவோ இயலாது.
பண மசோதா குறித்த தமது கருத்துக்களை இராஜ்ய சபை பரிந்துரைக்கவே இயலும்.
லோக்சபையிலிருந்து பண மசோதா இராஜ்யசபைக்கு வந்த 14 நாட்களுக்குள் பண மசோதாவை, இராஜ்யசபை பாிந்துரைகளுடனோ, பாிந்துரைகளின்றியோ லோக் சபைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
முழு அதிகாரம்
லோக்சபை அப்பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ முழு அதிகாரம் பெற்றுள்ளது. இராஜ்யசபையின் பாிந்துரைகளில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ ஏற்றுக் கொண்டால், இராஜ்யசபை மற்றும் லோக்சபையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
லோக்சபை பண மசோதாவை இராஜ்யசபைக்கு அனுப்பியபிறகு, 14 நாட்களுக்குள் திருப்பவில்லையெனில், 14 நாட்கள் கழிந்த பிறகு, இராஜ்யசபையால் அந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும்.
இவ்வாறு பண மசோதா இரு அவைகளிலும் தேர்ச்சியடைந்த பிறகு, சபாநாயகரின் “பண மசோதா“ என்ற சான்றுக் குறிப்புடன், ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.
ஜனாதிபதி அந்த பண மசோதாவை நிராகரிக்கவோ, மீண்டும் பரிசீலனை செய்யச் சொல்லியோ திருப்ப இயலாது, மாறாக தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.