ஜனாதிபதிக்கான அதிகாரங்கள்
ஜனாதிபதியின் அதிகாரங்களை அவரது நிர்வாகத்துறை அதிகாரங்கள், இராணுவ அதிகாரங்கள், அயல்நாட்டுறவு தொடர்பான அதிகாரங்கள், சட்டமியற்றும் அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள், நீதித் துறை, அதிகாரங்கள், நெருக்கடி நிலை அதிகாரங்கள் என தனித்தனி தலைப்புக்களில் காண்போம்.
நிர்வாகத் துறை அதிகாரங்கள்
இந்தியாவில் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே அமைச்சர்கள் அரசாங்கத்தை நடத்துவர். நாட்டின் முக்கிய நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொள்கிறார்.
லோக்சபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் அல்லது பிரதிநிதியை பிரதமராகவும், பிரதமரின் பரிந்துரையின் பேரில் மற்ற மத்திய அமைச்சர்களையும் ஜனாதிபதியே நியமிக்கிறார்.
இந்திய தலைமை வழக்கறிஞர் (அட்டர்னிஜெனரல்), இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர், மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் பிறஉறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்தின் தலைமைதேர்தல் அலுவலர் மற்றும் பிற தேர்தல்அலுவலர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமற்றும் பிற நீதிபதிகள், , உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தலைவர்கள், துணை நிலை ஆளுநர்கள், படைகளின் தளபதிகள், அயல் நாட்டுத் தூதர்கள், பல்கலைக்கழக குழுக்களின் உறுப்பினர்கள், நிதிக்குழுவின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.
மத்திய அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அவ்வாறே, இந்திய அட்டர்னி ஜெனரல், மாநில, ஆளுநர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து தாமே நீக்கிவிட இயலும்.
பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்றபிறகு, உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து குடியரசுத் தலைவரால் நீக்க இயலும்.
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை, உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையினைப்பெற்ற பிறகு, குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்யலாம்.
எனினும் மேற்குறிப்பிட்ட அனைத்து பதவி நீக்க அதிகாரங்களையும் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ள இயலும்.
நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே இந்தியாவின் நிர்வாகத்தைப் பற்றி சட்டமியற்றுவதற்கான பொருள்கள் பற்றியும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
நிர்வாகத்தை இயக்கும் போது குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று அரசியலமைப்பின் ஷரத்து 74 (1) குறிப்பிடுகிறது.
அவ்வாறுஅமைச்சரவை கூறும் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டவரா என்பது பற்றி அரசியலமைப்பு ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் மரபின் அடிப்படையில் அமைச்சரவையின் ஆலோசனையை அவர் புறக்கணிப்பது இல்லை.
படைத்துறை அதிகாரங்கள்
ஜனாதிபதியே முப்படைகளின் தலைமைப் பொறுப்பையும் கொண்டுள்ளார். அவரே போர் அல்லது அமைதிக்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் பெற்றவர்.
அதாவது ஜனாதிபதியே முப்படைத் தளபதி ஆவார். கப்பற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவற்றின் தளபதிகளையும் குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.
எனினும் அவரது இராணுவ அதிகாரங்கள் சட்ட வரைமுறைகளுக்குட்பட்டே அமைந்துள்ளது. அத்தகைய அதிகாரங்களை, பாராளுமன்றம் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் அதிகாரம் பெற்றுள்ளது.
வெளி உறவுத்துறை அதிகாரங்கள்
ஜனாதிபதியே இந்தியாவின் வெளி உறவுகளில் இந்தியாவின் பிரதிநிதியாகத் திகழ்கிறார். அயல் நாடுகளுக்குப் பயணம் செய்வதும், அந்தநாடுகளின் தலைவர்களை நம் நாட்டுக்கு அழைப்பதும், நாடுகளுக்கிடையேயான நல்லெண்ணத்தை வளர்ப்பதும், இந்திய நலன்களை மேம்படுத்துவதும் ஜனாதிபதியின் கடமையாகும்.
இந்திய தூதர்களை அயல் நாடுகளுக்கு அனுப்புவதும், அயல்நாட்டுத் தூதர்களை வரவேற்பதும் ஜனாதிபதியின் பொறுப்பாகும்.
சட்டத் துறை அதிகாரங்கள்
இங்கிலாந்து அரசி பாராளுமன்றத்தின் அங்கமாகத் திகழ்வது போல இந்தியக் குடியரசுத்தலைவரும் பாராளுமன்றத்தின் அங்கமாகத் திகழ்கிறார். எனவே அவருக்கு கணிசமான சட்டத்துறை அதிகாரங்கள் உள்ளன.
ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஒர் உள்ளுருப்பு ஆவார். பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை கூட்டவும், தேவைப்படும் போது கூட்டங்களை தள்ளிவைக்கவும், லோக்சபையைக் கலைக்கவும் ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.
அரசியலமைப்பின்படி ஒரு கூட்ட காலத்தின் (Session) இறுதி அமர்வுக்கும் அடுத்த கூட்ட கால முதல் அமர்வுக்கும் இடையே 6 மாதத்திற்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.
இராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்களையும், லோக்சபைக்கு ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களையும் நியமனம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டும் கூடும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் இரு சபைகளின் உறுப்பினர்களை ஒன்றாக அமர்த்தி ஜனாதிபதி உரையாற்றுகிறார்.
தனித் தனியாகவோ, அல்லது கூட்டாகவோ பாராளுமன்றத்தின் சபைகளிலும் உரையாற்றும் அதிகாரம் பெற்றுள்ளார்.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் மசோதா குறித்தோ அல்லது வேறு எந்தப் பொருள் பற்றியோ, இரு சபைகளுக்கும் சேர்த்தோ, அல்லது ஒரு சபைக்கு மட்டுமே செய்தி அனுப்பும் அதிகாரமும் பெற்றுள்ளார்.
நிதி மசோதா
பண மசோதா மற்றும் நிதி மசோதா ஆகிய இரு மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதியே ஒப்புதல் அளிக்கிறார்.
ஆண்டு நிதிநிலை அறிக்கை (Budget), இந்திய அரசாங்கத்தின் கணக்குகள் பற்றிய இந்திய தலைமை தணிக்கையாளரின் அறிக்கை, நிதிக்குழுவின் பரிந்துரைகள், மத்தியப் பொதுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டறிக்கை ஆகிய அறிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது குடியரசுத் தலைவரின் பொறுப்பாகும்.
பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நிறைவேற்றிய மசோதா ஒவ்வொன்றும், ஜனாதிபதியின் கையொப்பம் பெற்ற பின்னரே சட்டமாகும்.
பண மசோதா (Money Bill) மற்றும் அரசியலமைப்பு திருத்த மசோதா (Amendment Bill) ஆகியன தவிர பிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகவோ, ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி, வைப்பதாகவோ அல்லது தமது கருத்துக்களுடன், மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்புவதாகவோ ஜனாதிபதி அறிவிக்கலாம்.
ஆனால் மறுபரிசீலனைக்குப் பின்னர், திருத்தங்களுடனோ, திருத்தங்கள் இல்லாமலோ அந்த மசோதா மீண்டும் அனுப்பப்படும் போது அவா் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக் கூடாது.
மாநில சட்டமன்றங்கள் அவற்றின் ஆளுநர்களுக்கு அனுப்பும் மசோதாக்கள் அவர்கள் எந்த விதமான முடிவும் எடுக்காமல் அவற்றை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பலாம். அவற்றை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டால் சட்டங்களாகும்.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களில் முக்கியமான அதிகாரம், ஷரத்து 123 அவருக்கு வழங்கப்பட்டுள்ள அவசர சட்டங்களைப் பிறப்பிக்கும் (Ordinance) அதிகாரமே ஆகும்.
அவசர சட்டம்
இதன்படி பாராளுமன்றத்தின் இரு சபைகளுமோ, அல்லது ஏதேனும் ஒரு சபையோ கட்டத்தொடரில் இல்லாத போது, ஜனாதிபதி அவசர சட்டமியற்றுவதற்கான அவசியம் உள்ளதகக் கருதினால், உடனடியாக அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.
பாராளுமன்றம் இயற்றும் சட்டத்தின் வீச்சைப் போலவே ஜனாதிபதி இயற்றும் சட்டமும் செயல்படும்.
எனினும் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட அவசரசட்டம், பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து 6 வாரங்களுக்குள், சமர்ப்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.
அவ்வாறு அங்கீகாரம் பெறப்படவில்லையெனில், அச்சட்டம், பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து,6 வாரங்களுக்குப் பின் செல்லாததாகி விடும்.
அதுபோலவே ஜனாதிபதியும் தாம் விரும்பும் எந்நேரத்திலும், தாம் பிறப்பித்த அவசரச்சட்டத்தைத் திரும்பப் பெறலாம்.
போர்க்கால நெருக்கடி, வெள்ளம், வறட்சி போன்ற எதிர்பாராத காரணங்களால் ஏற்படும் செலவினங்களை மேற்கொள்ளும் அவசர தொகுப்பு நிதியத்தை (Contingency Fund of India) குடியரசுத்தலைவரே நிர்வகிக்கிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அரசின் தலைவர் (Head of ther State) மட்டுமே, அரசாங்கத்தின் தலைவர் அல்ல. அரசாங்கத்தின் (Head of the Government) தலைவர் பிரதமரே ஆவார்.
மக்களவையில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ள அமைச்சரவை வழங்கும் ஆலோசனையின்படியே குடியரசுத் தலைவர் இயங்குகிறார்.
அவ்வாறு அமைச்சரவை வழங்கும் ஆலோசனையை மீறி நடந்தால், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிய காரணத்திற்காக குற்ற விசாரணை செய்யப்படலாம். ஜனாதிபதியே நம் நாட்டிற்கான பிரதிநிதியாக திகழ்கிறார்.
நீதித்துறை அதிகாரங்கள்
எல்லா குடிமக்களையும் விட உயர்ந்தவராகக் கருதப்படும் குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகளை மன்னிக்கக்கூடிய அதிகாரத்தை அரசியலமைப்பு வழங்குகிறது.
ஒன்றிய சட்டத்திற்கு எதிராக குற்றம் இழைத்ததற்காக, இராணுவ நீதிமன்றம் அளிக்கும் தண்டனை மற்றும் மரண தண்டனை ஆகியவற்றை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவோ, தண்டனை அளவைக் குறைக்கவோ, குற்றவாளியை மன்னித்துத் தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிட வோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் கொண்ட ஒரே நபர் ஜனாதிபதியே ஆவார். மரணதண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் தவிர எஞ்சிய அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நீதி வழங்கும் அதிகாரத்தை அமைச்சரவையின் அறிவுரைப்படியே தான் குடியரசுத் தலைவர் உபயோகிக்கிறார்.
நெருக்கடி நிலை அதிகாரங்கள்
அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறையில் உள்ளது போன்றும், பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற ஆட்சி முறையில் உள்ளது போன்றும், சாதாரண அதிகாரங்களைத் தவிர இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் நெருக்கடி நிலையைச் சமாளிக்க சிறப்பு அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
அரசியலமைப்பில் மூன்று வகையான நெருக்கடிநிலை அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதிலுமோ, அதன் ஒரு பகுதியில் மட்டுமோ போர் அல்லது அன்னிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மோசமான நிலை உருவாகியிருக்கிறது என்று ஜனாதிபதிகருதினால் ஷரத்து 352-ன் கீழ் இந்தியா முழுமைக்குமோ, அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கோ அவசர நிலையைப் பிரகடனம் (Emergency) செய்யலாம்.
இப்பிரகடனத்தை அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரிலேயே குடியரசுத் தலைவர் வெளியிடுகிறார்.
நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்த பின், அது 2 மாதமுடிவிற்குள் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு முன்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற தீர்மானத்தின்படி மேலும் 6 மாதகாலத்திற்கு நீட்டிக்கப்படலாம். அவ்வாறு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தலாம்.
ஷரத்து 352-ன் கீழான அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருக்கும் போது, அடிப்படை உரிமைகள் நிலை நாட்டப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி (ஷரத்து 20 & 21 தவிர) வைக்கலாம்.
ஷரத்து 356-ன்படி ஏதேனும் ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் (அரசாங்கத்தை நடத்த இயலாத நிலை ஒரு மாநிலத்தில் ஏற்பட்டால்) அங்கே குடியரசுத் தலைவரின் ஆட்சியைப் பிரகடனப்படுத்தவும், குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
ஷரத்து-360 இன்படி இந்தியா முழுமைக்குமோ, அல்லது ஏதேனும் ஒரு பகுதியிலோ, இந்தியாவின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கு பாதிப்பு உள்ளதாகக் குடியரசுத் தலைவர் திருப்தியடைந்தால், நிதிநிலை நெருக்கடியை (Financial Emergency) பிரகடனப்படுத்தவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.
இதர அதிகாரங்கள்
பின்வரும் சில சூழ்நிலைகளில் மட்டும் ஜனாதிபதிதம் விருப்பப்படி செயல்பட இயலும்.
(1) எந்த ஒரு கட்சியும் மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றிராத சூழ்நிலையில், பிரதமரை நியமனம் செய்தல்,
(2) பதவியில் இருக்கும் பிரதமர் திடீரென்று இறந்துவிடும்போது, ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கூடி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாத நிலையிலும், கேபினட் அமைச்சர்களிடையே திட்டவட்டமான பணி மூப்பு முறை அமலில் இல்லாத நிலையில் அமைச்சரவைக்கு வெளியில் இருந்து பிரதமர் பதவிக்கு எவர் பெயரேனும் பரிந்துரைக்கப்படும் போது புதிய பிரதமரை நியமித்தல்.
(3) ஒர் அமைச்சரவை, மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்ட நிலையில், அல்லது, அதற்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் (No Confidence Motion) வெற்றி பெற்றுவிட்ட நிலையில், மக்களவையைக் கலைத்தல்.
(4) அவையின் நம்பிக்கையை இழந்த பின்னரும் பதவி விலக மறுக்கின்ற அமைச்சரவையைப் பதவி நீக்கம் செய்வது போன்ற மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் குடியரசுத் தலைவா் தம் முடிவின்படி செயல்படலாம்.
துணை குடியரசுத் தலைவர்
இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 63 துணைக் குடியரசுத் தலைவர் (Vice President) பற்றிக் கூறும் பிரிவாகும்.
துணை ஜனாதிபதி செயல்பாடுகள்
ஜனாதிபதி தேர்தலைப் போலவே ஜனாதிபதியும் மறைமுக தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
அதாவது துணை ஜனாதிபதி தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை.
துணைதலைவர் இராஜ்ய சபையின் தலைவராகப்பணியாற்றுகிறார்(Ex-officio Chairman of Rajya Sabha)
அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் (Warrant of Precedence) இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.
இராஜ்ய சபைக்குத் தலைமை வகிப்பதே துணைகுடியரசுத் தலைவரின் இயல்பான பணியாகும்.
எனினும், இறப்பு, பதவி விலகல், குற்ற விசாரணை மூலம் பதவி நீக்கம் மற்றும் இதர காரணங்களால் ஜனாதிபதி பதவி காலியானால், புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, துணை குடியரசுத்தலைவரே, ஜனாதிபதியாக (அதிகபட்சம் 6 மாதம் வரை) பதவி வகிப்பார்.
மேலும் ஜனாதிபதி தலைநகரில் இல்லாத சமயங்களிலும், நோயுற்ற சமயங்களிலும் அல்லது வேறு காரணங்களினால் தமது பணியைச் செய்யவியலாத சூழ்நிலைகளிலும், துணை ஜனாதிபதியே அப்பணிகளை நிறைவேற்றுவார்.
குடியரசுத்தலைவா் பொறுப்பினை வகிக்கும் போதும், அப்பதவிக்கு உரிய பணிகளை நிறைவேற்றும் போதும், துணை ஜனாதிபதி, மாநிலங்களவைத் தலைவருக்குரிய பொறுப்புக்களைக் கவனிக்க மாட்டார்.
ஜனாதிபதி பதவிக்கான பணிகளை ஆற்றும் போது, ஜனாதிபதிக்குரிய சம்பளம் மற்றும் பிற படிகள் துணை ஜனாதிபதிக்கு வழங்கப்படும். துணை ஜனாதிபதிக்கான தகுதிகள் குறித்து ஷரத்து 66 குறிப்பிடுகிறது.
துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதிகள்
(அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும், (ஆ) 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும், (இ) இராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய பெற்றவராக இருத்தல் வேண்டும்.
(ஈ) ஒன்றிய, மாநில, மற்றும் உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றில் எதிலும் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
எனினும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள், மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர் பதவியில் உள்ளோர் ஊதியம் பெறும் பதவியில் உள்ளவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
துணை ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் அவைகளிலோ அல்லது மாநில சட்டமன்றத்தின் அவைகளிலோ உறுப்பினராக இருத்தல் கூடாது. அவ்வாறு உறுப்பினராக உள்ள ஒரு நபர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், துணை ஜனாதிபதி பதவியேற்கும் நாள் முதல் அவரது சபை உறுப்பினர் பதவி முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
பதவிக்காலம்
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். துணை ஜனாதிபதி மீண்டும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் என அரசியலமைப்பு இயம்புகிறது.
எனினும் அடுத்த துணை ஜனாதிபதி தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்கும் வரையிலும், துணை ஜனாதிபதி பதவியில், 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் நீடிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
பதவி நீக்கம்
இராஜ்ய சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இராஜ்யசபையில் முதலில் தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானத்தை லோக்சபை அங்கீகரித்தபின், துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
எனினும் இராஜ்யசபையில் அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 14 நாட்கள் முன்னதாக, துணை ஜனாதிபதிக்கு ஒர் முன் அறிவிப்பு (Notice) தரப்படவேண்டும்.
மேலும், துணை ஜனாதிபதியை நீக்குவதற்கான தீர்மானத்தை (Resolution) லோக் சபையில் ஆரம்ப நிலையில் அறிமுகப்படுத்த முடியாது. துணை ஜனாதிபதியை நீக்குவதற்கு, குற்ற விசாரணை முறை (Impeachemnt Process) ஏதும் தேவையில்லை.
துணை ஜனாதிபதிக்கான பதவிக்காலம் முடிவதற்குமுன்பாகவே, அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே, வேறு காரணங்களினால் துணை ஜனாதிபதி பதவி காலியானால், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் முடிந்தவரையில் ( (அதிகபட்சம் 6 மாதங்களுக்குள்) நடத்தப்பட வேண்டும்.
தேர்தல்
இரகசிய வாக்குகளின் அடிப்படையில், ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறையில் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தலில், எழும் சந்தேகங்கள் மற்றும் தகராறுகளைத் தீர்க்கும் இறுதி அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் (Supreme Court) உள்ளது.
மாத ஊதியம்
துணை ஜனாதிபதி, இராஜ்ய சபை தலைவருக்கான சம்பளத்தைப் பெறுகிறார். இராஜ்ய சபைத் தலைவருக்கான மாத ஊதியம் தற்போது ரூ.1,25,000ஆகும். ஆண்டு ஓய்வூதியமாக ரூ.7.5 இலட்சமும் வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி பதவிக்கான செயல்பாடுகளை ஆற்ற நேர்ந்தால், அத்தருணங்களில், ஜனாதிபதிக்கான சம்பளம் மற்றும் இதரபடிகளை, துணை ஜனாதிபதி பெறுவார்.