இக்கட்டுரையில் இந்திய குடியரசுத் தலைவரை தோ்தெடுக்கும் முறை மற்றும் அவாின் அதிகாரங்கள் குறித்து TNPSC தோ்வு எழுதுபவா்களுக்கு பயனாளிக்கும் வகையில் சுருக்கமாக எழுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர்
ஒன்றிய நிர்வாகத்துறை
ஒன்றிய நிர்வாக அமைப்பு என்பது (1) குடியரசுத்தலைவர் (2) துணை குடியரசுத் தலைவா் (3) பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் (4) லோக்சபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் (5) இராஜ்யசபை தலைவர் மற்றும் துணைத் தலைவர் (6) பாராளுமன்ற உறுப்பினர்கள் (7) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிறநீதிபதிகள் (8) இந்திய அட்டர்னி ஜெனரல் (9) இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் போன்றோர் உள்ளிட்டதாகும்.
ஒன்றியநிர்வாகத் துறையின் தலைவராகத்திகழ்பவர் குடியரசுத் தலைவர் ஆவார். நமது அரசியலமைப்பின் ஐந்தாவது பகுதி ஒன்றியம் பற்றி ஷரத்து 52 முதல் 151 வரை குறிப்பிடுகிறது.
குடியரசுத் தலைவரை நாட்டின் நிர்வாக தலைவர் ஆவார் (Executive Head of the state) அவரே முப்படைத் தளபதியும் ஆவார். ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகனாகவும் அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய அரசின் அனைத்து நிர்வாக செயல்களும் ஜனாதிபதியின் பெயரிலே மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியே ஜனாதிபதி தனது நிர்வாக அதிகாரங்களை பயன்படுத்துகிறார்.
அரசியலமைப்பின் 42 வது திருத்தச் சட்டம் அமைச்சரவையின் ஆலோசனையை ஜனாதிபதியை பின்பற்றியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
குடியரசுத் தலைவா் தோ்தல் முறை
ஜனாதிபதி மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதி தேர்தல் பற்றி ஷரத்து 54 மற்றும் 55 ஆகியவை குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி, ஓர் தேர்வுக்குழு (Electoral College) மூலம் ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு (Single transferable vote system by means of Preportional Representation) முறையிலான இரகசிய வாக்கெடுப்பு (Secret ballot system) முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அத்தேர்வுக் குழுவானது (1) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் மற்றும் (2) மாநில சட்டப் பேரவைகளின் (Elected members of Legislative Assembly) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரைக்கொண்டிருக்கும்.
ஜனாதிபதி தேர்தலில் புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க இயலும்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு பின்வரும் வழிமுறைப்படி காண்பர்.
சட்டப்பேரவை உறுப்பினர் வாக்கு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/ தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000.
இவ்வாறே பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பை பின்வரும் வழிமுறையின்படி கணக்கிடுவர்.
பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு = மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குமதிப்பு / தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கவும், தீர்த்து வைக்கவும் உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது. இதில் உச்சநீதிமன்றத்தின் முடிவே இறுதியானது.
குடியரசுத்தலைவா் பதவிக்கான வேட்பு மனு, வேட்பாளர் கையொப்பத்துடன் 50 பேர் முன்மொழிய, 50 பேர் வழிமொழியப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கான காப்புத் தொகை (டெபாசிட்) ரூ.15000.
துணை குடியரசுத்தலைவா் தேர்தலில் நிற்பதற்கான காப்புத் தொகையும் ரூ.15000 ஆகும்.
பதிவான செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளைப் பெறவில்லையெனில் காப்புத் தொகையை இழக்க நேரிடும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் – தகுதிகள்
ஷரத்து 58 ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உரிய தகுதிகளை வரையறுக்கிறது. அதன்படி (அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
(ஆ) 35 வயதை நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும் .
(இ) மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவராக இருத்தல் வேண்டும்
(ஈ) இந்திய அரசு அல்லது ஏதாவதொரு மாநில அரசு அல்லது மேற்கண்ட அரக்களுக்குக் கட்டுப்பட்ட ஏதாவதொரு உள்ளாட்சி அதிகார அமைப்பின் கீழ் ஊதியம் பெறும் எப்பதவியிலும் இருத்தல் கூடாது.
ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில ஆளுநர், அல்லது மாநில அரசுகளின் அமைச்சர்கள் ஆகியோர் ஊதியம் பெறும் பதவியில் இருப்பதாகக் கருதப்பட மாட்டார்கள்.
மேலும் ஜனாதிபதியாக பதவி வகிப்பவரோ, அல்லது பதவி வகித்தவரோ மீண்டும் ஜனாதிபதிதேர்தலில் நிற்கத் தடையேதும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலோ, அல்லது மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.
அவ்வாறு உறுப்பினராக இருந்தால், ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஏற்கும் நாளில், சபை உறுப்பினர் பதவியை விட்டுவிட வேண்டும்.
குடியரசுத் தலைவர் – ஊதியம், பதவிப்பிரமாணம்
ஜனாதிபதி, எந்த ஊதியம் பெறும் பதவியையும் வகித்தல் கூடாது. ஜனாதிபதிக்கு தற்போது ரூ.1,50,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. 5ஆண்டு பதவிக்காலம் முடிவுற்றதும், தொடர்ந்து, அவரது இறுதிக்காலம் வரை ஆண்டு ஒய்வூதியமாக ரூ.9 இலட்சமும் வழங்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஜனாதிபதிக்கு பதவிப் பிரமாணம் (Oath of Office) செய்து வைக்கிறார். ஜனாதிபதி, அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் – பதவிக்காலம்
ஜனாதிபதி தாம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நாள் முதல் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என ஷரத்து 56 குறிப்பிடுகிறது.
அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும், அடுத்த, ஜனாதிபதி பதவியேற்கும் வரை பதவி வகிப்பார் (ஷரத்து 57).
ஜனாதிபதி, தனது பதவிக்காலம் முடியும் முன்னரே இராஜினாமா செய்வதாக இருப்பின், தனது இராஜினாமா கடிதத்தை, துணை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த பின்னர் பதவி விலகலாம்.
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியதற்காக, அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே, குற்ற விசாரணைமுறை (Process of Impeachment) மூலம், பாராளுமன்றத்தால் பதவி நீக்கப் பெறலாம் ஷரத்து 61 குறிப்பிடுகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்னரே, ஜனாதிபதி இராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ, குற்ற விசாரணை மூலம் நீக்கப்பட்டாலோ, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய தேர்தல் 6 மாத காலத்திற்குள் நடத்தப்பட்டு, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
குடியரசுத் தலைவர் – குற்ற விசாரணை முறை
ஜனாதிபதி, அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே, குற்ற விசாரணை முறை (Impeachment) மூலம் பதவியிலிருந்து நீக்கப் பெறலாம். எனினும் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியதற்காக மட்டுமே, குற்ற விசாரணை செய்யப்பட்டு, பதவி நீக்கப் பட வழி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை, குற்றவிசாரணை மூலம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்றம் வசமுள்ளது
ஜனாதிபதிக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம், பாராளுமன்றத்தின் எந்த அவையில் வேண்டுமானாலும் புகுத்தப்படலாம். எனினும் அந்த தீர்மானத்தில், சபையின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்குக் குறையாமல் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
அத்தீர்மானத்தை சபை அங்கீகரிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதிக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் இத்தகைய தீர்மானம் சபையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
குற்ற விசாரணை புகுத்தப்பட்ட சபை தவிர, எஞ்சிய சபை ஜனாதிபதி மீதான குற்ற விசாரணை குறித்து விசாரணை செய்யும். குற்ற விசாரணையின்போது ஜனாதிபதி ஆஜராகி, தமக்காக வாதிடவும், பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைவழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், குற்ற விசாரணைத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித் தனியே நிறைவேற்றப்பட்டால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் ஜனாதிபதி, அவர் பதவியிலிருந்து விலக்கப்படுவார்.
ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும்
மரணம், இராஜினாமா, அல்லது பதவி நீக்கம் போன்ற காரணங்களால், ஜனாதிபதி பதவிகாலியானால் துணை ஜனாதிபதியும், துணைஜனாதிபதியும் இல்லாமலிருந்தால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், அவரும் இல்லையென்றால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும் ஜனாதிபதி பதவியை வகிக்க அரசியலமைப்பு வழிசெய்துள்ளது.
ஜனாதிபதி பதவி காலியானால், 6 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதி தலைநகரில் இல்லாத சமயங்களிலும், நோயுற்ற சமயங்களிலும், அல்லது வேறு காரணங்களால் தமது பணியைச் செய்யவியலாத சூழ்நிலைகளிலும், துணை ஜனாதிபதியே, அப்பணிகளைச் செய்வார்.
அவ்வாறு துணை ஜனாதிபதி பணிபுரிய நேர்ந்தால், அவர் ஜனாதிபதி பதவிக்கான ஊதியம் மற்றும் பிறபடிகளைப் பெற அரசியலமைப்பு வழிசெய்துள்ளது.
ஜனாதிபதிக்கான அதிகாரங்கள்
ஜனாதிபதியின் அதிகாரங்களை அவரது நியமன அதிகாரங்கள், நிர்வாகத்துறை அதிகாரங்கள், இராணுவ அதிகாரங்கள், அயல்நாட்டுறவு தொடர்பான அதிகாரங்கள், சட்டமியற்றும் அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள், நீதித் துறை, அதிகாரங்கள், நெருக்கடி நிலை அதிகாரங்கள் என தனித்தனி தலைப்புக்களில் காண்போம்.
நிர்வாகத் துறை அதிகாரங்கள்
இந்தியாவில் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே அமைச்சர்கள் அரசாங்கத்தை நடத்துவர். நாட்டின் முக்கிய நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொள்கிறார்.
லோக்சபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் அல்லது பிரதிநிதியை பிரதமராகவும், பிரதமரின் பரிந்துரையின் பேரில் மற்ற மத்திய அமைச்சர்களையும் ஜனாதிபதியே நியமிக்கிறார்.
இந்திய தலைமை வழக்கறிஞர் (அட்டர்னிஜெனரல்), இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர், மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் பிறஉறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்தின் தலைமைதேர்தல் அலுவலர் மற்றும் பிற தேர்தல்அலுவலர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமற்றும் பிற நீதிபதிகள், , உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தலைவர்கள், துணை நிலை ஆளுநர்கள், படைகளின் தளபதிகள், அயல் நாட்டுத் தூதர்கள், பல்கலைக்கழக குழுக்களின் உறுப்பினர்கள், நிதிக்குழுவின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.
மத்திய அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அவ்வாறே, இந்திய அட்டர்னி ஜெனரல், மாநில, ஆளுநர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து தாமே நீக்கிவிட இயலும்.
பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்றபிறகு, உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து குடியரசுத் தலைவரால் நீக்க இயலும்.
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை, உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையினைப்பெற்ற பிறகு, குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்யலாம்.
எனினும் மேற்குறிப்பிட்ட அனைத்து பதவி நீக்க அதிகாரங்களையும் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ள இயலும்.
நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே இந்தியாவின் நிர்வாகத்தைப் பற்றி சட்டமியற்றுவதற்கான பொருள்கள் பற்றியும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
நிர்வாகத்தை இயக்கும் போது குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று அரசியலமைப்பின் ஷரத்து 74 (1) குறிப்பிடுகிறது.
அவ்வாறுஅமைச்சரவை கூறும் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டவரா என்பது பற்றி அரசியலமைப்பு ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் மரபின் அடிப்படையில் அமைச்சரவையின் ஆலோசனையை அவர் புறக்கணிப்பது இல்லை.
படைத்துறை அதிகாரங்கள்
ஜனாதிபதியே முப்படைகளின் தலைமைப் பொறுப்பையும் கொண்டுள்ளார். அவரே போர் அல்லது அமைதிக்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் பெற்றவர்.
அதாவது ஜனாதிபதியே முப்படைத் தளபதி ஆவார். கப்பற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவற்றின் தளபதிகளையும் குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.
எனினும் அவரது இராணுவ அதிகாரங்கள் சட்ட வரைமுறைகளுக்குட்பட்டே அமைந்துள்ளது. அத்தகைய அதிகாரங்களை, பாராளுமன்றம் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் அதிகாரம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பிற அதிகாரங்களையும் துணை ஜனாதபதியினை தோ்தேடுக்கும் முறையினை அடுத்த கட்டுரையில் பாா்க்கலாம்.
கட்டுரையினை பாா்க்க இங்கே சொடுக்கவும் >>>