இந்த பகுதியில் இந்திய பாராளுமன்றம் குறித்து சுருக்கமாக பாா்ப்போம்.
பாராளுமன்றம்
இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 79-ல், பாராளுமன்றம் என்பது ஜனாதிபதி, லோக்சபை (மக்களவை), இராஜ்யசபை (மாநிலங்களவை) ஆகிய மூன்று உறுப்புக்களைக் கொண்டது என குறிப்பிடுகிறது.
பாராளுமன்ற ஆட்சி முறை & செயல்பாடுகள்
அரசியலமைப்பின் பகுதி 5-ல் (Part-V) உள்ள இரண்டாவது அத்தியாயம் ஒன்றிய சட்டமியற்றும் சபை குறித்து, அதாவது பாராளுமன்றம் குறித்துக் குறிப்பிடுகிறது.
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்க ஆட்சிமுறையைப் (Parliamentary type of Government) பின்பற்றுகிறது.
பாராளுமன்றத்தின் ஓர் உள்ளுறுப்பாக ஜனாதிபதி பங்கு வகிக்கிறார்.
ஒன்றியத்தின் சட்டமியற்றும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திடம் உள்ளது. ஷரத்து 79-ன்படி பாராளுமன்றம் என்பது ஜனாதிபதி, மாநிலங்களவை(இராஜ்ய சபை) மற்றும் மக்களவை ஆகியவை கொண்டது என்று அறிவோம்.
ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாதிருப்பினும், ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஒர் உள்ளுருப்பாகவே கருதப்படுகிறார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவது (Summoning) மட்டுமின்றி, லோக் சபையை கலைப்பதற்கும், எந்த ஒரு சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்ற ஆட்சிமுறை பின்பற்றப்படுகிறது. சட்டமியற்றும் பணிமட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பிற முக்கியப், பணிகளையும் மேற்கொள்வதில், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பாக பாராளுமன்றம் திகழ்கிறது.
பாராளுமன்ற ஆட்சி முறை என்ற வடிவத்தை இந்திய அரசியலமைப்பு இங்கிலாந்திடம் இருந்து பெற்றுள்ளது என்பது நினைவு கூறத்தக்கது.
பாராளுமன்றத்தின் தலையாய பணி , நாட்டின் நன்மைக்கான சட்டங்களை இயற்றுவதே ஆகும். மத்தியப் பட்டியல் (Union List) மற்றும் பொதுப்பட்டியல் (Concurrent List) ஆகிய இரண்டிலும் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாராளுமன்றம் பெற்றுள்ளது.
மேலும் பாராளுமன்றம் அரசியலமைப்பில் வரையறுக்கப்படாத, சொல்லப்படாமல் உள்ள எஞ்சிய (Residuary) தலைப்புகளிலும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.
அமைச்சரவையை உருவாக்கி அதன் கூட்டுப் ஏற்படுத்தித்தருவதும் பாராளுமன்றத்தின் மற்றொரு முக்கியப் பணியாகும்.
அமைச்சரவைக் குழு
அமைச்சரவைக் குழு, லோக் சபைக்கு மட்டுமே கூட்டுப் பொறுப்பு வாய்ந்தது என்றாலும், அமைச்சரவையின் உறுப்பினர்கள் லோக்சபையிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர் என்று கூற இயலாது.
ஒவ்வொரு அமைச்சரவையிலும் சில உறுப்பினர்களாவது இராஜ்ய சபையிலிருந்து இடம் பெறுவதற்கு பிரதமர் வழி செய்திருப்பார்.
ஒவ்வொரு அமைச்சரும், அவரது துறையின் கீழுள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு பொறுப்பாவார். அதாவது அவரது துறை சார்பான கேள்விகளில், பாராளுமன்றத்திற்கு அமைச்சரே பொறுப்புடையவராகிறார்.
அரசாங்கத்தின் பொதுவான செயல் நடவடிக்கைகளுக்கு, அமைச்சரவையே, பாராளுமன்றத்திற்கு பொறுப்பாகிறது. இதன் காரணமாகவே ஒரு அமைச்சர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் (No Confidence Motion) கொண்டு வரப்பட்டாலும், அதன் விளைவு ஒட்டு மொத்த அமைச்சரவையையும் மீது பொறுப்புள்ளாக்குகிறது.
மேலும் பாராளுமன்றம் நிர்வாகத்துறை மீதான அதிகாரங்களில் நிதிக் கட்டுப்பாட்டையும் விதிக்கிறது. நாட்டின் நிதி மீதான ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கொண்டதாக பாராளுமன்றம் விளங்குகிறது.
இந்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி பணம் செலவு செய்ய இயலாது. மேலும்பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி எந்தவித வரியும் விதிக்கப்பட இயலாது.
நிதி குறித்த அதிகாரங்களைப் பொறுத்தவரை லோக் சபையே அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
அரசியலமைப்பைத் திருத்தும் நடவடிக்கை
பாராளுமன்றத்தின் மற்றொரு முக்கியப்பணி அரசியலமைப்பைத் திருத்தும் பணியாகும். இந்திய அரசியலமைப்பின் ஷரத்துக்களின்படி, பாராளுமன்றமே இந்திய அரசியலமைப்பைத் திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இயலும்.
கூட்டாட்சி குறித்த சில விஷயங்களைத் தவிர,அதாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும் அம்சங்கள் தவிர, பிற அம்சங்களில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் சிதையாமல், மாற்றங்களை ஏற்படுத்த, பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
லோக்சபை (மக்களவை)
இந்திய பாராளுமன்றத்தின் கீழவையே லோக்சபை அல்லது மக்களவை ஆகும். லோக் என்ற இந்தி மொழிச் சொல்லுக்கு மக்கள் என்று பொருள்.
மக்களவை (House of People) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
அனைத்து மாநிலங்களிலிருந்து 530 உறுப்பினர்களுக்கு மிகாமலும், அனைத்து யூனியன் பிரதேசங்களிலிருந்து 20 உறுப்பினர்களுக்கு மிகாமலும், ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் 2-க்கு மிகாமலும் லோக் சபையில் இடம் பெற, இந்திய அரசியலமைப்பு வழிசெய்துள்ளது.
மேலும் அரசியலமைப்பு, ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குத் தக்கவாறும், லோக் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ள, பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி பாராளுமன்றம் மாநிலங்களிலிருந்து 530 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களிலிருந்து 13 உறுப்பினர்களும் லோக் சபையில் இடம் பெற வழிசெய்துள்ளது.
543 தொகுதிகளில் 84 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காகவும், 47 தொகுதிகள் பழங்குடியினப் பிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் 2008-ன் மூலம் இந்த ஒதுக்கீடு சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு லோக்சபைக்கு என 39 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 39 தொகுதிகளில் 7 இடங்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகவும், எஞ்சிய 32 இடங்கள் பொதுப்பிரிவு தொகுதிகளாகவும் உள்ளன.
ஷரத்து 331-ன்படி போதுமான பிரதி நிதித்துவம் இல்லாத சூழ்நிலையில், 2 ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களை லோக்சபையில் நியமன (Nominated ) அதிகாரம் உறுப்பினர்களாக நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் லோக் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2020-ம் ஆண்டு வரை. 545-ஆக, வரையறுத்துள்ளது. லோக்சபை குறித்து ஷரத்து 81 குறிப்பிடுகிறது.
லோக் சபையின் பதவிக்காலம்
லோக் சபையின் பதவிக்காலம் பொதுவாக 5 ஆண்டுகள். எனினும் அதன் பதவிக் காலத்திற்கு முன்பாகவே ஜனாதிபதியால் கலைக்கப்படலாம்.
அரசியலமைப்பின் 42-வது திருத்தத்தின்போது, 1976-ல் லோக் சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. ஆனால் 44-வது திருத்தத்தின் போது, 1978-ல் 5 ஆண்டுகளாக மீண்டும் மாற்றப்பட்டது.
ஷரத்து 352-ன் அடிப்படையிலான தேசிய நெருக்கடி நிலை (National Emergency) பிரகடனத்தின் போது மட்டும் லோக்சபையின் இயல்பானபதவிக்காலமாகிய 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் நீட்டிக்கப்படலாம். எனினும் ஒரு தடவையில் 1 ஆண்டுக்கு மேலாக லோக் சபையின் பதவிக்காலத்தை நீட்டிக்கஇயலாது.
அதுபோலவே நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின் 6 மாதத்திற்கு மேல் லோக் சவையின் பதவிக் காலத்தை நீட்டிக்க இயலாது.
லோக்சபை உறுப்பினர் – தகுதிகள்
லோக் சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் ஒரே அளவிலான மக்கள் தொகை கொண்ட பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதால் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிகலோக்சபை இடங்களும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த லோக்சபை இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
லோக் சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் ஆ) 25 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும் இ) பாராளுமன்றத்தின் எந்த ஒரு தொகுதியிலாவது வாக்குரிமை பெற்றிருக்க வேண்டும். (ஷரத்து 84.)
தகுதியிழப்பு விதிகள்
மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் கீழ்வரும் தகுதியிழப்பு விதிகள் பொருந்தும்.
(i) அரசு ஊதியம் பெறும் பதவியில் உள்ள நபர்கள் (2) மனநிலை பாதிப்படைந்தவர்கள் (3)தாமே விரும்பி பிற நாட்டின் குடியுரிமையைப் பெற்ற நபர்கள் (4) நீதிமன்றத்தால் கடன் தீா்க்க இயலாதவராக அறிவிக்கப்பட்டவர் (5) பாராளுமன்றத்தின் கீழான எந்த ஒரு சட்டத்தால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்ட நபர்கள்.
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மேற்காணும் எந்தவொரு தகுதியிழப்பு ஏற்பட்டாலும், அல்லது கண்டறியப்பட்டாலும் அந்த உறுப்பினரின் பதவிகாலியானதாக அறிவிக்கப்படும்.
மேலும் உறுப்பினர் தனது பதவியை எப்போதுவேண்டுமானாலும் இராஜினாமா செய்யலாம்.
லோக் சபையாக இருப்பின் சபாநாயகராலும் (Speaker), இராஜ்யசபையாக இருப்பின் (Chairman) தலைவராலும், அந்த உறுப்பினரின் இராஜினாமா குறித்து முடிவெடுக்கப்படும்.
எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், முன் அனுமதியின்றி தொடர்ந்து 60 நாட்களுக்கு மேல்சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதிருந்தால், அல்லது வராதிருந்தால், அவரது உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும்.
உறுப்பினர்களின் தகுதியிழப்பு குறித்து முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும், ஜனாதிபதி, தேர்தல் ஆணையத்தின் (Election Commission) ஆலோசனையின்படி செயல்படுவார்.
சபாநாயகா் மற்றும் துணை சபாநாயகா்
லோக் சபையின் தலைவராக சபாநாயகரும், துணை தலைவராக துணைத் சபாநாயகரும் (Speaker &Deputy Speaker) செயல்படுவர்.
சபாநாயகர் லோக்சபையின் தலைவராக செயல்படுவது மட்டுமின்றி, லோக் சபையின் நடவடிக்கைகளையும் அவரே கட்டுப்படுத்துகிறார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் லோக் சபையின் உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பொதுவாக சபாநாயகர் பெரும்பான்மைக் கட்சியைச் சார்ந்தவராகவும், துணைச் சபாநாயா் எதிர்க்கட்சியைச் சோ்ந்தவரை தேர்ந்தெடுக்கப்படுவது இயல்பு.
மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) பதவியும் இங்கிலாந்து அரசியலமைப்பில் இருந்து நாம் எடுத்துக் கொண்ட ஒரு அம்சமே. சபாநாயகர் (மக்களவைத் தலைவர்) தலைமையில் மற்றும் அவரது மேற்பார்வை இயக்கத்தின் கீழ் மக்களவைச் செயலகம் (Lok Sabha Secretariat) செயல்படுகிறது.
சபாநாயகர் (பேரவைத்தலைவர்) வராத போதும் ,செயல்பட இயலாத போதும், பணிகளை சபாநாயகரின் பணிகளை துணை சபாநாயகர் மேற்கொள்வார்.
14 நாட்களுக்கு முன்னதாக முன் அறிவிப்பு அளித்த பின், லோக் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானத்தின் மூலம். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரையும், பதவி நீக்கம் செய்யலாம்.
தமது பதவிக்காலம் முடிந்த பின்னரும் புதிய லோக் சபை உருவாகும் வரை சபாநாயகர் பதவியில் இருப்பார்.
சபாநாயகர் தமது வாக்கை, வாக்குச் சமநிலை (Equality of Votes) நிலவும் போது பயன்படுத்த இயலும். சபையின் விதிமுறைகளை தீர்மானிப்பதிலும், முடிவு செவதிலும் சபாநாயகரே இறுதி அதிகாரம் உடையவராகிறாா்.
மேலும் சபையை ஒழுங்குபடுத்தும் அதிகாரமும் சபாநாயகர் பெற்றுள்ளார். சபையின் கண்ணியம் மற்றும் சிறப்பு ஆகியவற்றிக்கு சபாநாயகரே பொறுப்பேற்கிறாா்.
சபாநாயகர் தாம் பதவி விலக விரும்பினால் பதவி விலகல் கடிதத்தை துணை சபாநாயகரிடம் அளிப்பார். துணை சபாநாயகர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளிப்பார்.
இராஜ்ய சபையின் துணைத் தலைவர் பெறும் சம்பளத்திற்கு இணையான சம்பளத்தையே சபாநாயகர் பெறுகிறார்.
சில அதிகாரங்களை
இராஜ்ய சபையின் தலைவர் பெற்றிராத சில அதிகாரங்களை சபாநாயகர் பெற்றுள்ளார், அவை பின்வருமாறு:
(1) பாராளுமன்றத்தின் இரு சபை கூட்டுக் கூட்டத்திற்கு (Joint Sitting) சபாநாயகரே தலைமை வகிக்கிறார்
(2) ஒரு பண மசோதா (Money Bill) லோக் சபையிலிருந்து இராஜ்ய சபைக்கு செல்வதற்கு முன்பாக, பண மசோதா என்ற சான்றினை சபாநாயகரே அளிக்கிறார்.
(3) பண மசோதா என்று அறிவிப்பதற்கான இறுதிஅதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது.
(4) பாராளுமன்றத்தின் முக்கிய குழுக்களை சபாநாயகரே நியமிக்கிறார்.
(5) ஒத்திவைப்பு தீர்மானத்தின் போது (Adjournment Motion) சபாநாயகரின் அனுமதி அவசியம் தேவைப்படுகிறது.
(6) பாராளுமன்றத்தின் சில குழுக்களுக்கு,( Ex-officio Chairman) தலைவராக சபாநாயகரே (Ex-officio) விளங்குகிறார்.
சபாநாயகரின் சபை ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது.
கட்சித் தாவல் சட்டத்தின் அடிப்படையில் (Anti-Defection Law) ஒரு உறுப்பினர் தகுதியிழப்பு( நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்பட்டது) அடைவது குறித்து தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது.
மேலும் சபாநாயகரே பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான மதிப்புமிகு தொடர்பாளராக விளங்குகிறார். இவ்வாறு சபாநாயகர் பதவி பெரும் பொறுப்புடையதாகவும், பாராளுமன்ற ஆட்சிமுறையின் கண்ணியத்தை பேணிக் காப்பதில் பொறுப்புடையதாகவும் திகழ்கிறது.
இந்தியாவில் முதல் லோக்சபை சபாநாயகராக செயல்பட்டவர் கணேஷ் வாசுதேவ் மாவலங்கார் (15.01.1952 – 27.02.1956) ஆவார். இவரே மக்களவையின் தந்தை எனப்படுகிறார்.
இந்தியாவின் முதல் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் எம்.அனந்தசயனம் அய்யங்கார் (30.05.1952 – 07.03.1956).
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகராக செயலாற்றியவர் மீரா குமார் (2009-2014) ஆவாா்.
அடுத்த கட்டுரையில் லோக் சபையின் சிறப்பு அதிகாரங்கள் பற்றி பாா்ப்போம்.